Friday 15 January 2016

ரஜினி முருகன்- கதகளி விமர்சனம்


ரஜினி முருகன்...

தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம். பொங்கலுக்கு தீபாவளி சாப்பிடமுடியுமா..? சாப்பிடமுடியாது. ஆனால் கொண்டாடலாம். ரஜினி முருகன் பாருங்கள். சரவெடி வெடித்து பொங்கலுக்கு தீபாவளி கொண்டாடியிருக்- கிறார்கள்.

படம் ஆரம்பித்து சிவா என்ட்ரி ஆன பின்பு அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு காமெடிப் பட்டாசு கொளுத்தி- யிருக்கிறது ரஜினி முருகன் டீம். என்ன செய்வீங்களோ தெரியாது... ஆனால் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை சிரித்தே ஆகவேண்டும் பாஸ் என்று கங்கணம் கட்டி அடித்திருக்கிறார்கள். அதிலும் அந்த வாழைப்பழ காமெடியில் தியேட்டரே அதிர்கிறது.

எப்போதும் சோலோ காமெடியில் சூர மொக்கைப் போடும் சூரி, சிவாவுடன் சேரும்போது மட்டும் பூவோடு சேர்ந்த நாராக மணக்கிறார்.. இருவரும் சேர்ந்து அடிக்கும் கூத்துதான் படத்தின் முக்கிய பிளஸ்.

கீர்த்தி சுரேஷின் அந்த சிரிப்புக்கு தியேட்டரையே எழுதிவைக்கலாம் (ஓனர்தான் ஒத்துக்க மாட்டார்). தமிழில் முதல்படம் போல.. நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். ஸ்ரீதிவ்யாவின் இடத்தைக் கண்டிப்பாக காலி செய்துவிடுவார்.

இமான் இசையில் அனைத்து பாடல்களும் தாளம்போட வைக்கின்றன.

வெளிநாட்டில் வசிக்கும் மகன்களை வரவழைக்க இறந்தது போல நடிக்கும் ராஜ்கிரண் வழக்கம்போல கிளாஸ்..! நான் செத்தா எல்லோரும் வந்து பார்ப்பீங்க.. ஆனா நான் எப்படிப்பா உங்களை எல்லாம் பார்க்கிறது என்று அதற்கு விளக்கம் சொல்லும் இடம் நச்...!. " என் பேரனுக்கு தமிழே சொல்லிக் கொடுக்கல... பிறகு என்னைப்பத்தி எங்கே சொல்லியிருக்கப் போறீங்க.." என்று ஆதங்கப்படும் இடம் பளார்..பளார்...

வில்லனாக சமுத்திரக்கனி ஆரம்பத்தில் செம கெத்து காட்டுகிறார். கடைசியில் அவர் காமெடிப் பீஸாகப் போவார் என்பது முன்கூட்டியே தெரிந்தாலும் அவர் கொடுக்கும் அலப்பறை ரசிக்க வைக்கிறது.

ஒரு முழுநீள நகைச்சுவையில் இடையிடையே கொஞ்சம் செண்டிமெண்ட், குடும்பப் பாசம், பூர்வீக சொத்து, கொஞ்சம் அடிதடி, கொஞ்சம் கவர்ச்சி, கடைசியில் வில்லனே காமெடியனாக மாறுவது என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் சுந்தர்.சி சொல்லியடிக்கும் சக்சஸ் பார்முலா... அதை அச்சு பிசகாமல் செய்திருக்கிறது ரஜினி முருகன்.

படத்தில் கதையென்று எதுவும் இல்லாவிட்டாலும் இரண்டரை மணிநேரம் தொய்வில்லாமல் திரைக்கதை அமைத்து ரசிகர்களைப் பரவசப் படுத்தியிருக்கிறார்கள்.


கதகளி....

சம்பாவை போட்டது யாரு...?  இதுதான் கதகளி.

சம்பா கடலூர் மீனவ சங்கத்தலைவர். கட்டப்பஞ்சாயத்து, கடத்தல் என்று கடலூரையே தன் கட்டுக்குள் வைத்து தனி ராஜ்ஜியம் நடத்தும் தாதா..

சம்பாவை கூலிப்படை ஒன்று ஸ்கெட்ச் போட்டு ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்கிறது. ஏற்கனவே சம்பாவுடன் முன் விரோதத்தில் இருக்கும் விஷால் குடும்பத்தின் மீது அந்தக் கொலைப்பழி விழுகிறது. தன் மீது விழுந்த பழியைப் போக்கவும், தன் குடும்பத்தை அந்தக் கும்பலிடமிருந்து காக்கவும் சம்பாவை போட்டது யாரு என்று விஷால் தேடி அலைவதுதான் கதகளி.

முதல் பாதி செம மொக்கை. விஷால்-கேத்தரினா தெரேசா காதல் காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யமே இல்லாமல் படத்தை நகர்த்த மட்டுமே பயன்படுகிறது. மெட்ராஸ் படத்தில் 'கலை'யாக வந்து கலக்கியவர் இதில் அசடுவழிகிறார்.

பேஸ்புக் புகழ் கவிக்குயில் கல்பனா அக்கா பாத்திரத்தில் கருணாஸின் மனைவி. கல்பனா அக்காவைப் பற்றித் தெரியாதவர்களுக்கு அவரது கேரக்டரும் மொக்கையாகத்தான் தெரியும்.

முன்பாதியில் கோட்டை விட்டவர்கள் பின்பாதியில் கொடியை நட்டுயிருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு வழக்கமான விறுவிறு விஷால் பார்முலா. சும்மா ஜிவ்வென்று தெறித்து ஓடுகிறது திரைக்கதை. வழக்கமாக மதுரை மண்ணில் ஜல்லிக்கட்டு காளையாக சீறும் விஷால், இதில் கடலூர் மண்ணில் கதகளி ஆடியிருக்கிறார்.

கடைசியில் சம்பாவை கொன்னது இவர்தான்... இல்லையில்லை அவர்தான்.. அவரும் இல்லை இவர்தான் என்று ஏகப்பட்ட ட்விஸ்ட் வைக்கிறார்கள். அதுவே ஒருவித சலிப்பை எற்படுத்துகிறது. இன்னும் கொஞ்சம் நேரம் தியேட்டரில் இருந்தால் சம்பாவை கொன்னது நாம்தான் என்று இன்னொரு ட்விஸ்ட் வைத்துவிடுவார்- களோ என்ற பீதியிலே அடித்துப் பிடித்து வெளியேற வேண்டியதாயிற்று..

முன்பாதி இழுவையை தவிர்த்திருந்தால் இன்னொரு பாண்டிய நாடாக வந்திருக்கும். இருந்தாலும் அலட்டல் இல்லாத அறிமுகத்தோடு, இழுவையான சண்டைக்காட்சிகள், பறக்கும் சுமோ , ஓவர் செண்டிமெண்ட் போன்ற பில்டப்புகள் எதுவும் இல்லாததால் கதகளி பாஸ் ஆகியிருக்கிறது.


பின்குறிப்பு: 

# தாரை தப்பட்டை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவர்கள் தலை தெறிக்க ஓடுவதாக செய்தி வருகிறது. ராகதேவனின் ஆயிரமாவது படத்திற்கா இந்த நிலைமை..!?

# கெத்து படத்தின் ரிசல்ட்டும் ஒருமுறை பார்க்கலாம் என்கிற ரீதியில்தான் விமர்சனம் வந்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் பொங்கல் ரேஸில் முதலிடத்தில் வருவது இவ்வளவுநாள் ஆறப்போட்டு அடித்த ரஜினி முருகனேதான்....!