Saturday 9 March 2013

பொதுத்தேர்வு வினாக்களில் குளறுபடி ஏன்..?



ன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்டது.வழக்கம் போல தேர்வு எழுதும் உறவினர் வீட்டுக் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஊருக்கு போன் செய்து 'ஆல் தி பெஸ்ட்' சொல்லி பரீட்சை எவ்வாறு இருந்து என வினவினேன்.

தமிழ் முதல்தாள் மிகவும் எளிதாக இருந்ததாகவும் சென்ற வருடம் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட நிறைய கேள்விகள் இந்
வருடமும் கேட்கப்பட்டது என தெரிவித்தார்கள்.பொதுவாகவே கடந்த ஐந்து வருடங்களில் கேட்கப்படும் கேள்விகளை படித்தாலே போதும் அதிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்படும் என எனது ஆசிரியர்கள் சொன்ன பழைய அட்வைஸை இப்போதும் உதிர்த்துவிட்டு போனை துண்டித்தேன்.

சில நாட்களுக்கு முன்  ஊடக செய்திகளைப் படிக்கும் போது இது பூதாகரமான பிரச்சினையாக்கப்பட்டது தெரியவந்தது.கடந்த 2012 மார்ச் மாதம் நடந்த தமிழ் முதல் கேள்வித்தாள், அப்படியே இந்த ஆண்டும், "ரிப்பீட்' ஆகியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டியிருக்கிறார்கள்.மொத்தம் 10 பகுதிகளில், 50 கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் கேள்வித்தாள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில், 63 மதிப்பெண்களுக்கான 29 கேள்விகள், அப்படியே வரி பிசகாமல், இந்த ஆண்டு கேள்வித்தாளிலும் இடம் பெற்றுள்ளன.

சரி.. நம் கல்வியாளர்களிடம் ஏன் இந்த மெத்தனப் போக்கு.. ? சமச்சீர் கல்வி என்றெல்லாம் பெருமை பீத்திக்கொள்ளும் நம் கல்வி முறையில் இது பின்னடைவு இல்லையா...? சில நேரங்களில் அவுட் ஆப் சிலபஸில் கேள்விகள் கேட்டு எக்ஸாம் ஹாலில் ஏகப்பட்ட டென்சனை ஏற்றிவிடுவார்கள்.

உங்களுக்கும் கோபம் வருகிறது தானே...பின்ன வாழ்க்கையில எழுதும் ஒரே ஒரு பொதுத் தேர்வில் இப்படி அலட்சியப் போக்கில் வினாக்கள் கேட்பது சரியா...? எனக்கும் அப்படித்தான் ஆனது.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது கணிதத்தில் சென்டம் அடித்தே ஆகவேண்டும் என்கிற வெறி காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் ஒரு மார்க்கில் என்னை வெறுப்பேற்றியது.அதுவே பொதுத் தேர்வில் 'ஏக டென்சனாக' மாறிப்போனது.பத்தாம் வகுப்புக்கு சம்மந்தமே இல்லாத sec,cosec,cot என முக்கோனவியலில் கேள்விகள் கேட்கப்பட,எக்ஸாம் ஹாலில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன்.அந்த டென்சனில் ஒரு இரண்டு மார்க் கேள்வியை விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்பதை வெளியில் வந்துதான் அறிந்தேன். சிலபஸைத் தாண்டி கேட்கப்படும் கேள்விகளுக்கு அட்டெண்ட் செய்தாலே முழு மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்ற விதிமுறை இருந்த போதிலும் அது எக்ஸாம் எழுதும் ஹாலிலேயே உறுதி செய்யப் படாததால் அந்த நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தினால் நிகழும் தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் ...?

ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடிய இந்த பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பின் பொதுத்தேர்வில் ஏன் இந்த குளறுபடி ஏற்படுகிறது..?

பொதுவாகவே 10 வது மற்றும் 12 வது பொதுத் தேர்வுக்கு வினாத்தாள்கள் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா..?

வினாக்களின் தரத்தை விட பாதுகாப்பு அம்சமே இது போன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதற்கு முழு பொறுப்பு அரசுத் தேர்வுகள் இயக்குனரகத்தையே சாரும்(Directorate of Government Examination ).வினாத்தாட்களை தேர்வுசெய்யும் பொறுப்பு இவர்களிடம்தான் உள்ளது.'கொஸ்டின் பேப்பர் அவுட்' ஆகாமல் பாதுகாக்கும் மிகப்பெரிய கடமையும் இந்த இயக்குநரகத்திடம் உள்ளது.


உதாரணமாக... 12 ஆம் வகுப்பு கணிதப் பாடத்தின் பொதுத்தேர்வு வினாத்தாள் தயார் செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.இவர்களின் முதல் நோக்கமே எந்த விதத்திலும் வினாத்தாள்கள் அவுட் ஆகிவிடக் கூடாது என்பதே.இதற்காக தனிக்குழு எதுவும் கிடையாது. இதற்காக  வெவ்வேறு பதவிகளில் உள்ள, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத ஐந்து பேரைத் தேர்ந்தெடுப்பார்கள்.அந்த ஐந்து பேரும் யார் என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரியும்.அந்த ஐந்து பேரில் ஒருவர் பனிரெண்டாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்,ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஒருவர் பல்கலைக் கழக கணித பேராசிரியர் என வெவ்வேறு நிலையில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முந்தைய வருடங்களில் கேட்கப்பட்ட வினாத்தா
ள்களைக் கொடுத்து இதே போன்ற வினாத்தாளை அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

அவர்கள் அமைத்த ஐந்து வினாத்தாள்களும் தனித்தனியாக பாதுகாப்புடன் இயக்குனரகத்திடம் வரும்.அந்த ஐந்து வினாத்தாள்களில் எந்த வினாத்தாள் எனபதை இயக்குனர்தான் தேர்ந்தெடுப்பார்.ஒருவேளை இந்த ஐவரில் யாரேனும் 'லீக்' செய்துவிட்டால் வினாத்தாள் அவுட் ஆவதற்கு நிகழ்தகவு குறைவுதான்.அப்படி அவுட் ஆகும் பட்சத்தில் மற்றொரு வினாத்தாளையும் உபயோகப் படுத்தவும் முடியும்.

முதலில் ஐந்து  வினாத்தாளிலும் சரியாக இருநூறு மார்க்குக்குதான் கேட்கப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் இயக்குனர் சோதிப்பார். கேள்விகள் அவுட் ஆப் சிலபஸில் இருந்தாலோ அல்லது தவறான வினாவாக இருந்தாலோ அவரால் இனம் காண முடியாது.

பின்பு அவை தனித்தனியாக சீல் செய்யப்படும். இப்போது எந்த வினாத்தாள் யார் எடுத்தது என்பது அவருக்கும் தெரியாது. இந்த ஐந்து வினாத்தாளில் ஏதாவது ஒன்றை ராண்டமாக தேர்ந்தெடுப்பார்.

பிறகு அது சிவகாசியிலோ அல்லது சென்னையிலோ அச்சிடப்படுவதில்லை.தமிழ்த் தெரிந்தவர்கள் இல்லாத அச்சகமாக இருக்கவேண்டும் என்பது முதல் நோக்கம்.அதற்காக பீகார்,மகாராஷ்டிரா போன்ற தமிழர்கள் வேலைசெய்யாத அச்சகமாக அதைக் கொண்டு செல்வர்.எந்த அச்சகம் என்பதும் ரகசியமாக வைக்கப்படும். ஒரே அச்சகத்திலும் கொடுக்க மாட்டார்கள். அச்சிடப்பட்டவுடன் இறுதியாக அது சீல் செய்யப்பட்டு இயக்குனரகத்திடம் வந்து சேரும்.

சரி.. இப்போது யோசிப்போம்.தவறு எதனால் ஏற்படுகிறது? பொதுவாகவே பாடப்புத்தகங்கள் தயார் செய்வதற்கு கல்வித்துறையில் உயர்பதவியில் இருப்பவர்கள் ஒரு குழுவாக இணைந்து வேலை செய்வார்கள். ஆனால் வினாத்தா
ள்களை குழுவாக இணைந்து தயார் செய்ய முடியாது.அச்சிடப்பட்ட வினாத்தாள்களை சரிபார்ப்பதற்கும் குழு அமைக்க முடியாது.இரண்டுமே ரிஸ்க்கான விசயம்தான்.ஏதோ ஒரு ஓட்டை வழியாக வினாத்தாள் அவுட் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அச்சகத்திலும் அச்சிட முடியாது.இது அதைவிட பாதுகாப்பற்ற விஷயம்.வேறு வழியில்லாமல்தான் இந்த பழைய நடைமுறையையே பின்பற்றி வருகிறார்கள்.

தற்போது நமக்கு நிறைய கேள்விகள் எழலாம்.அச்சகத்திற்கு செல்லும் முன்பே சரிபார்க்கலாமே...அட்லீஸ்ட் அச்சிட்டு வந்த பிறகாவது அனுபவமுள்ள ஒருவரை வைத்து இறுதி ஆய்வு செய்யலாமே...  இதுபோன்ற கேள்விகள் அவர்களுக்கும் எழாமல் இருக்காது.எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்த சூழலில் வேறு ஏதாவது புதிய யுத்தியைப் பயன்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற குறைகளை சரி செய்யமுடியும். 



--------------------------------------------(((((((((((((((((())))))))))))))))))))))----------------------------------------






2 comments:

  1. வினாத்தாள் தயாரிப்பதிலேயே குளறுபடி உள்ளது... அது ஒருபுறம் இருக்கட்டும்...

    மாணவ மாணவியருக்கு, முக்கியமாக பெற்றோர்களுக்கு "மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும்" என்பதை தவிர வேறு எந்த சிந்தனை உள்ளது...? (சிலரைத் தவிர...)

    இன்னும் நிறைய சொல்லலாம்... சுருக்கமாக :

    அதே சிந்தனை கல்லூரிகளில் படிக்கும் போது எடுபடுவதில்லை... புரிந்து படிக்கவும் முடிவதில்லை...

    மதிப்பெண்கள் அதிகம் எடுப்பவர்கள், வாழ்க்கையில் தோற்றுப் போவதற்கான காரணங்களில் ஒன்றே ஒன்று மட்டும் தான் மேலே சொன்னது... மற்றவை யோசியுங்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. எனக்கு ரொம்ப நாள் இருந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்தீங்க அதுதான் கேள்வி தாள் அச்சிடுவதை பற்றி மேலும் எப்படி இருந்தாலும் அந்த பாடங்களும் தானே படிக்க வேண்டும் எதிர் பார்க்காமல் தானே கொடுக்க பட்டுள்ளது அதனால் என்ன தீமை வரும் நல்ல விளக்கங்கள் சொல்லிருகீங்க நன்றி

    ReplyDelete